காபி கோப்பையும் காதல் கடிதமும்
ஓர் ஊரில் முருகன் என்ற இளைஞன் இருந்தான். நல்ல படிப்பாளி. நூலகத்தில் சென்று படிப்பான்.ஆனால் காதல் என்றாலே வாய் குழறும்.
அதே ஊரில் மல்லிகா என்றொரு பெண்.ரொம்ப புத்திசாலி. கல்லூரி நூலகத்தில் வேலை பார்க்கிறாள்...
முருகனுக்கு மல்லிகாவை மிகவும் பிடிக்கும். ஆனால் நேரில் பேச பயம்.
அதனால் என்ன செய்தான் தெரியுமா?
காதல் கடிதம் எழுதினான்.
"அன்புடையீர் மல்லிகாவே,
உன் பெயர் சொன்னால் போதும்
மார்பில் மழை சாரல் பெய்கிறது
நீ தோழியாய் வந்து
காதலாய் நிலைத்து விட்டாய்
நீ என் தோழி மட்டுமல்ல
நெஞ்சில் நிறைந்த காதலும்
சிரிப்பில் துயர் துடைக்கும் மருந்தும்
கை பிடித்து வழி காட்டும் துணையும்
உன் கண் பேசும் மொழி கேட்டு
உயிர் பூ போல மலர்கிறது
உடன் இருந்தால் போதும்
உலகமே விழாவாகிறது
உன் கண்ணீரில் என் வலி கரைகிறது
உன் சிரிப்பில் என் உலகம் பூக்கிறது
தொலைவு வந்தாலும்
நினைவு உன்னை சுற்றியே சுழல்கிறது
இப்படி சில எழுதி, கடிதத்தை ஒரு காபி கோப்பைக்குள் வைத்து அவள் இருக்கும் பக்கத்தில் வைத்துவிட்டான்.
சில மணி நேரங்களில் பிறகு மல்லிகா அந்த காபி கோப்பையை எடுத்தாள். உள்ளே கடிதம் இருந்தது. படித்துவிட்டு சிரித்தாள்.
உடனே அவளும் ஒரு பதில் கடிதம் எழுதினாள்.
"அன்புடையீர்,
தங்கள் கடிதம் கிடைத்தது. ஆனால் கோப்பையில் இருந்த காபி கறை கடிதத்தின் மேல் விழுந்துவிட்டது.
அடுத்த முறை கடிதம் தரும்போது, காபி இல்லாத கோப்பையாக பார்த்து தாருங்கள்.
மேலும், நூலகத்தில் பேச அனுமதி இல்லை. வெளியே மரத்தடியில் சந்திக்கலாம்."
இதை படித்த முருகன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.
அடுத்த நாள் மரத்தடிக்கு சென்றான். கையில் புதிய கோப்பை. அதில் காபியும் இல்லை, கடிதமும் இல்லை.
பதிலாக இரண்டு சமோசா இருந்தது.
மல்லிகை கேட்டாள்: "கடிதம் எங்கே?"
முருகன் சொன்னான்: "காபி கறை விழக்கூடாது என்று இந்த முறை உணவு கொண்டு வந்தேன். பேசிக்கொண்டே சாப்பிடலாமே"
அன்றிலிருந்து அவர்கள் காதல் கடிதத்தில் தொடங்கி, சமோசாவில் தொடர்ந்தது 😄

0 Comments